‘தி மென்’ என்ற படத்தில் அறிமுகமான மார்லன் பிராண்டோ ‘எ ஸ்ட்ரீட் கார் நேம்டு டிஸையர்’, ‘ஆன் தி வாட்டர் ஃப்ரெண்ட்’ போன்ற படங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றவர்.
உலகம் முழுக்க எத்தனையோ கேங்க்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும் அவற்றுக்கெல்லாம் முன்னோடி ‘தி காட்ஃபாதர்’ திரைப்படம். அத் திரைப்படத்தில் தனது நேர்த்தியான மற்றும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் மார்லன் பிராண்டோ.
1973 ஆம் ஆண்டு நடைப்பெற்ற 45- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் மார்லன் பிராண்டோ பெற்றிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி கறுப்பின மக்கள், செவ்விந்தியர்கள் போன்றோரின் உரிமைக்காகவும் மார்லன் பிராண்டோ போராடி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது மார்லன் பிராண்டோ எழுதிய பிரேக் அப் கடிதம் ஒன்று ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. மார்லன் பிராண்டோ, 1940 களில் அவரின் காதலியான Solange Podell- க்கு பிரேக் அப் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தை அவர் பென்சில் கொண்டு எழுதியிருக்கிறார்.
தற்போது RR என்ற ஏல விற்பனை நிலையம், அந்தக் கடிதத்தை ஏலத்திற்கு விடுவதாகவும் அதன் விலை 15,000 அமெரிக்க டாலர் என்றும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி வரை ஏலம் நடைபெறும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே பென்சில் கொண்டு மார்லன் பிராண்டோவால் எழுதப்பட்ட அந்த பிரேக் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.