சென்னையில் உள்ள மாம்பலம் ரெயில் நிலையத்தை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வழியாக பொருட்கள் வாங்குவதற்காக தி.நகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து செல்கிறார்கள்.
இதனால், ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக ரூ.23 கோடி செலவில் மாம்பலம் ரெயில் நிலையத்திலிருந்து தி.நகர் மேட்லி சாலை சந்திப்பிற்கு நடந்து செல்லும் வகையில் நடை மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் வழியாக பொது மக்கள் நெரிசலில் சிக்காமல் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் மேட்லி சாலையை அடைய முடியும்.
சுமார் 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமதமானது. இந்த நிலையில் இந்தப் பாலம் அமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த பாலம் அமைப்பதற்கான பணிகள் நிறைவுபெற இருப்பதால், பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகளும் செல்வதற்காக சக்கர நாற்காலி வசதியும் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த நடைபால பணிகளை துணை மேயர் மகேஷ்குமார் பார்வையிட்டு, மீதமுள்ள பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.