சான்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத் தீயினால் இதுவரை 22 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ தென் அமெரிக்க நாடான சிலியில், கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான காட்டுப் பகுதிகளில் தீ பிடித்தது.
காட்டுத் தீ காரணமாக இதுவரை 22 பேர் பலியாகினர். காட்டுத் தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகளில் சிலி அரசு ஈடுபட்டு வருகிறது. விமானம் மூலம் தண்ணீர், ரசாயனம் ஆகியவை காட்டுத் தீ அதிகம் உள்ள இடங்களில் தெளிக்கப்படுகிறது. எனினும் தீயின் தீவிரத்தால் காட்டுத் தீயை அணைப்பது சவாலாக இருப்பதாக சிலி மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீயினால் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்” என்று தெரிவிக்கபட்டுள்ளது.
காட்டுத் தீ காரணமாக அவசர நிலையை சிலி அரசு அறிவித்துள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீ என்று சிலி அரசு தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பூமியின் வெப்ப நிலை 1.1 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2040 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிடும். பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை தாண்டினால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு மனித இனங்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடினமான சூழல் உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் விஞ்ஞானிகள் உலகத் தலைவர்களை வலியுறுத்தி வருகின்றனர்.