காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 4 பேர் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் அழகுவேல். இவரது மகள் அனுசுயா (வயது 21). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கரூர் வைசியா வங்கியில் டெலிகாலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு வந்த அனுசுயா தன்னை 4 பேர் காரில் கடத்தி வந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்திருந்தார்.
இளம் பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்!
தன்னுடைய சக தோழியை சந்திக்க நேற்று இரவு சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்ததாகவும், செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த 4 இளைஞர்கள் தன்னிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே காரில் கடத்திக்கொண்டு சென்றதாகவும், தன்னை கடத்தி சென்ற நான்கு இளைஞர்களும் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அப்புகாரில் அவர் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அனுசுயாவை அழைத்துச்சென்று செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனைக்காக உட்படுத்தினர்.
நடந்தது என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவரை மூன்று மாதகாலமாக அனுசுயா காதலித்து வந்துள்ளார். சலீம் நேற்று திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி அழைத்ததால்தான் செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு வந்ததாகவும், ரயில்வே நிலையம் அருகே காத்திருந்து சலீமுடன் பைக்கில் மலையாங்குளம் வீட்டுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு வைத்து அனுசுயாவை சலீம் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அனுசுயா தான் தயாராக வைத்திருந்த தாலிக்கயிறை எடுத்து சலீம்மிடம் கொடுத்து இந்த தாலியை உடனே நீ கட்டு என கூறியதாகவும் தெரிகிறது. அதை சலீம் மறுத்ததாகவும், அதனால் அனுசுயா சத்தம் போட்டு அந்த பகுதி மக்களை கூட்டியதாகவும், அப்பகுதி மக்கள் அனுசுயாவை அழைத்துக்கொண்டு வந்து காவல் நிலையத்தில் விட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறுப்படுகிறது.
காவல்துறை தரப்பில் கொடுத்த விளக்கம்!
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் தெரிவிக்கையில்,
”காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 4 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகார் அளித்த வழக்கில், பெண்மணி பொய் புகார் அளித்துள்ளார். காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார். தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவ்வாறு எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பொய் புகார் கொடுத்ததும், அவர் காவல்துறையிடம் நாடகமாடியதும் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது” என அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM