விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனாலும், காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் அதிக அளவு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. மேலும் காரியாபட்டி பகுதியில் கம்பிக்குடி நிலையூர் கால்வாய் திட்டம் மற்றும் நரிக்குடி பகுதியில் கிருதுமால் நதி நீர் பாசனம் ஆகியவற்றில் போதுமான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெரும்பான்மையான கண்மாய்கள் நிரம்பியதால் விவசாயம் செழித்துள்ளது.
அறுவடை நேரம் என்பதால் விவசாயிகள் நெல்லை சிரமமின்றி விற்பனை செய்ய காரியாபட்டி நரிக்குடி ஒன்றியங்களில் முடுக்கன்குளம், டி.வேப்பங்குளம், மேலக்கல்லங்குளம், அ.முக்குளம், நரிக்குடி, மானகசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஒரு சில இடங்களில் அரசு நிர்ணயிக்கப்பட்ட நிலைகளை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு, உலக்குடி, நாலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், காரியாபட்டி, நரிக்குடி ஒன்றியப் பகுதிகளில் மேலும் பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்றும், நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு நடத்தி முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.