ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அ.தி.மு.க தரப்பில் வேட்பாளரைத் தேர்வுசெய்து, தேர்தல் ஆணையத்தில் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு, எடப்பாடி பழனிசாமி அணியிலிருக்கும் அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்குச் சென்றிருக்கிறது. இதையடுத்து, வேட்பாளர் விவரங்கள்கொண்ட சுற்றறிக்கையை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி, ஒப்புதல் பெறுகின்ற பணியை தமிழ்மகன் உசேன் தொடங்கிவிட்டார். ஓ.பி.எஸ் தரப்புக்கும் நீதிமன்ற உத்தரவுப்படி, அவைத்தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், ஓ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், பிரபாகர் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள், “நீதிமன்ற உத்தரவின்பேரில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதம், அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்ச நீதிமன்றம் கூறியதற்கு முரணாக, எடப்பாடி பழனிசாமியின் முகவராகவே செயல்பட்டிருக்கிறார். அதாவது, யார் யார் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்ற வேட்பாளர் பட்டியல், பொதுக்குழு உறுப்பினர்கள் முன்பு வைக்கப்பட்டு, அவர்களில் யார் பெரும்பான்மையானவர்களால் (பொதுக்குழு உறுப்பினர்கள்) தேர்வு செய்யப்படுகிறார்களோ, அவர்கள்தான் வேட்பாளர். அதிகாரபூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார், யார் வேட்பாளர்கள் என்று தெரிவிக்காமல், தென்னரசு பெயரை மட்டும் படிவத்தில் குறிப்பிட்டு அனுப்பியிருக்கிறார்.
எங்கள் தரப்பு வேட்பாளர் பெயரைக் குறிப்பிடாமல், நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாகச் செயல்பட்டிருக்கிறார். வேறு வேட்பாளரை முன்னிறுத்துவது குறித்து எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இதர வேட்பாளர்கள் போட்டியிடும் உரிமையைத் தட்டிப் பறிப்பதற்கு அவைத்தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்துவிட்டு, ஏற்கிறீர்களா… இல்லையா என்கிறார்கள்.
இத்தகைய சட்டவிரோதச் செயலுக்கு ஒருபோதும் உடந்தையாக இருக்க மாட்டோம். எனவே, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் கடிதத்தைப் புறக்கணிக்கிறோம். மேலும், அவைத்தலைவர் அனுப்பிய கடிதம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்” என்றனர்.