சென்னை அடுத்த தாம்பரம் அருகே அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாகவே மிகவும் சோர்வாக இருந்து வந்துள்ளார். மேலும், மாணவி பள்ளியிலும் மயங்கி விழுந்துள்ளார்.
இது தொடர்பாக, ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரணை செய்த போது, வீட்டின் உரிமையாளரின் மகன் விக்கி என்பவர் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது. உடனே, இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்கியை கைது செய்தனர்.
அதன் பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் பின்வருமாறு:- “மாணவி பள்ளியில் இருந்து வரும்போது விக்கி அடிக்கடி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அவர் வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய விக்கி மாணவியுடன் நெருங்கி பழகி, அவரை தனது இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று அதே பகுதியில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதையடுத்து, விக்கி மாணவிக்கு குளிர்பானத்தில் போதை பவுடர் கலந்து கொடுத்து, அவரை போதைக்கு அடிமையாக்கி அடிக்கடி அழைத்து சென்று அவரிடம் அத்துமீறியுள்ளார்.
அதற்கு அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஆத்திரமடைந்த விக்கி அந்த மாணவியிடம் அவரது பெற்றோரை கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
நாளடைவில், விக்கியின் கொடுமை தாங்கமுடியாமல், மாணவி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப்புகாரின் பேரில் போலீசார் விக்கியைக் கைது செய்துள்ளனர்.
மேலும், அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கைதான விக்கி ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.