அதானி சர்ச்சையில் பிரதமர் மௌனம்; காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்.!

அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமத்துக்கு 88 கேள்விகளையும் முன்வைத்துள்ளது. ஆனால் அதானி குழுமம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளுமே மிக மோசமாக சரிந்து வருகின்றன. கடந்த 3ம் தேதி மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 35% வரை சரிந்துவிட்டது. ஹிண்டென்பர்க் அறிக்கை வெளியான பிறகு மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு சுமார் 70% மேல் சரிந்துவிட்டது.

இதுமட்டுமல்லாமல், அதானி பத்திரங்களின் மதிப்பும் சரிந்துவிட்டது. இதனால், அதானி பத்திரங்களை இனி பிணையாக ஏற்க முடியாது என சிட்டிகுரூப், கிரெடிட் சூயிஸ் போன்ற சர்வதேச வங்கிகள் தடாலடியாக முடிவெடுத்துவிட்டன. இதுபோக, அதானி பங்குகளை தேசிய பங்குச் சந்தையும், மும்பை பங்குச் சந்தையும் கூடுதல் கண்காணிப்பு பட்டியலில் (ASM) வைத்துள்ளன.

அதானி பங்குகள் தொடர் சரிவால் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்துகொண்டே வருகிறது. ஜனவரி 24ஆம் தேதி வரை உலகின் 3ஆவது மிகப்பெரிய பணக்காரராக கவுதம் அதானி முன்னணியில் இருந்தார்.

ஹிண்டென்பர்க் அறிக்கை வெளியானதை தொடர்ந்து படிப்படியாக சரிந்து இப்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 21ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். Bloomberg பணக்காரர்கள் பட்டியலின்படி கவுதம் அதானி இதுவரை 59.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார்.

அதானி குழுமத்தின் முறைகேடுகளுக்கு பிரதமர் மோடி உதவியாக இருந்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தநிலையில் அதானி முறைகேடுகள் குறித்து பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘ அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் தினமும் மூன்று கேள்விகளை எழுப்பும்.

செப்டம்பர் 5, 2016 அன்று சீனாவின் ஹாங்சோவில் நடந்த G20 உச்சிமாநாட்டில், நீங்கள் (மோடி) கூறியது: ‘பொருளாதார குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை அகற்றவும், பணமோசடி செய்பவர்களைக் கண்டுபிடித்து நிபந்தனையின்றி நாடு கடத்தவும், சிக்கலான சர்வதேச விதிமுறைகள் மற்றும் அதிகப்படியான வலையை உடைக்கவும் நாங்கள் செயல்பட வேண்டும்’ என நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா?

பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அதானி உலகின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். ஆனால் பிரதமர் அமைதியாக இருக்கிறார். எந்த விசாரணையும் செய்யப்படவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதில்களைத் தயாராக வைத்திருங்கள், திங்கள்கிழமை நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.