ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே தனியாக சைக்கிள் ஓட்டிச்சென்ற 13 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை 3 கிலோ மீட்டார் தூரம் பைக்கில் சிறுமியின் உறவினர்கள் விரட்டினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த பள்ளமுள்ளு வாடி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பேனா வாங்குவதற்கு தனியாக ஏரிக்கரையோரம் சைக்கிளில் சென்றார்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஆசாமி ஒருவன், விலாசம் கேட்பது போல நடித்து, சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். சிறுமி சத்தம் போட்டு அலறியதால், அங்கிருந்து இருசக்கர வாகனத்தை கிளப்பிக் கொண்டு தப்பிச்சென்றுள்ளான்.
அதற்குள்ளாக சிறுமி, அந்த ஆசாமியின் இரு சக்கர வாகன எண்ணை ஊராரிடம் தெரிவிக்க, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெற்றோர் அந்த ஆசாமியை தேடினர்.
அப்போது அவர்களை கடந்து சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தில், அந்த சிறுமி சொன்ன பதிவெண் இருந்தது.
இதையடுத்து அக்கிராமத்தினர் இருசக்கர வாகனத்தில் அவனை விரட்டிச்சென்றனர்
அவனை நிற்கச்சொல்லி சத்தமிட்ட போதும், அவன் நிற்காமல் வேகமாக தப்பிச்சென்றான்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்றபோதும் அவன் தப்பியதால், உடனடியாக அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த இருசக்கர பதிவெண்ணை வைத்து, அவன் வாலாஜாபேட்டை அடுத்த தென்கடபந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனை பிடித்து விசாரித்தனர். ஸ்ரீபெரும்புதூரில் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த மணிகண்டன் தனது கூட்டாளியை பார்க்க வந்தபோது, தனியாக வந்த சிறுமியிடம் அத்துமீறியது உறுதியானது.
இதையடுத்து மணிகண்டனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவனை வேலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.