30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் நேற்று (பிப்.,4) மயங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். வழுக்கி விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

நேற்று கவர்னர் ரவி, டிரம்ஸ் சிவமணி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நடிகர் சிவக்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ‛திரை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிறந்து 19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களைப் பாடி சரித்திர சாதனையைப் படைத்துள்ளார். அண்மையில் தான் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால் பத்மபூஷன் விருது வாங்குவதற்கு முன்பே எதிர்பாராத விதமாக அவர் மறைந்துள்ளார்' எனக் கூறினார். மேலும், வாணி ஜெயராமின் இசை பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும எனவும் அறிவித்தார்.

அதன்படி, வாணி ஜெயராமனின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 30 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பி.சுசிலா இரங்கல் வீடியாே
மறைந்த பாடகி வாணி ஜெயராமிற்கு, பாடகி பி.சுசீலா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், @வாணி ஜெயராமின் மீது நல்ல நட்பும், மரியாதையும் இருந்தது. வாணி ஜெயராமின் இறப்பு இசைத்துறைக்கு மிகப் பெரிய இழப்பு.. நானும், வாணி ஜெயராமும் ஒரு 100 பாட்டுக்கு மேல் சேர்ந்து பாடியிருக்கிறோம். வாணி நிறைய பேசமாட்டாங்க. சிரிக்க மாட்டாங்க. அவங்களை சிரிக்க வைப்பதே ரொம்ப கஷ்டம். பாலு, நான், வாணி இருக்கிறப்போதான் அவங்க சிரிப்பாங்க.

வாணி ஜெயராம் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடன் என்னால் நம்பமுடியவில்லை. ரொம்ப நல்லவங்க.. நல்ல பாடகி… 7 ஸ்வரங்களை அவரை மாதிரி யாருமே பாட முடியாது. ஒரு தனிப்பட்ட குரல் அவருக்கு. வாணியின் குரல் எங்க கேட்டாலும் சரியாக நான் கண்டுபிடித்துவிடுவேன்' என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.