விக்டோரியா கவுரி உண்மை முகம் இதுதான்; உடைத்து பேசிய துரை வைகோ!

விக்டோரியா கவுரி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக திராவிட கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவரது பதவியேற்பிற்கு எதிராக சில வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஒருபக்கம் வழக்கு விசாரணை, மறுபக்கம் பதவியேற்பு விழா என இன்று காலை மிகவும் பரபரப்பாக சென்றது.

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆனால் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாக பதவி வகித்த முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அவரது பதவிக் காலத்தில் எப்படி நடந்து கொள்கிறார்? என்பதை பொறுத்து அடுத்தகட்டமாக யோசிக்கலாம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் எந்தவித பிரச்சினையும் இன்றி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றுக் கொண்டார்.

துரை வைகோ பேட்டி

அவருக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, இந்தியாவை பொறுத்தவரை ஒன்றுபட்ட சமூக நீதியை நிலைநாட்டும் நாடாக திகழ்கிறது. இத்தகைய பெருமைமிகு நாட்டில் சாதி, மத உணர்வுகளை தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்தும் வலதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளன.

சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சு

இந்நிலையில் பாஜகவின் மகளிரணி செயலாளர், சர்ச்சைக்குரிய வழக்கறிஞர் விக்டோரியா கவுரியின் மதவெறி பேச்சுகளை அனைவரும் அறிவார்கள். இஸ்லாம் மதத்தினரை பச்சை தீவிரவாதிகள், கிறிஸ்துவ மதத்தினரை வெள்ளை தீவிரவாதிகள், கிறிஸ்துவ மதத்தின் ரோமன் கத்தோலிக்க பிரிவினரை நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்றும் விமர்சனம் செய்து வந்துள்ளார்.

கொலிஜியம் செய்தது சரியா?

இவ்வாறு மதவெறியை தூண்டும் மலிவான கருத்துகளை பதிவு செய்யும் வருகிறார். பொது வெளியிலும், ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களிலும் இதேபோன்ற கருத்துகளை தெரிவித்து வந்திருக்கிறார். இப்படிப்பட்ட நபரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதனை பல்வேறு வழக்கறிஞர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்திய அரசியல் சாசனத்தின் படி அனைவருக்கும் சமமான நீதியை வழங்க வேண்டும்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது

ஆனால் இப்படிப்பட்ட நபர்கள் நீதிபதியாக வந்தால் சம நீதி கிடைக்குமா? அநீதிகள் இழைக்கப்படாதா? தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? எனக் கேள்வி எழுப்பினார். விக்டோரியா கவுரியின் நியமனம் வேதனைக்குரியது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது. தமிழ்நாட்டிற்கு ஏற்புடையது அல்ல. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அவர்கள் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.