சிரியா நிலநடுக்கம்: பலியான கர்ப்பிணி தாய்; தப்பி பிழைத்த குழந்தை; திக்… திக்… நிமிடங்கள்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயரமான கட்டிடங்கள் பலவும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இந்த இடிபாடுகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்கப்பட்ட குழந்தை

இந்நிலையில் சிரியாவில் ரகத் இஸ்மாயில் என்ற 18 மாத குழந்தை பத்திரமாக காப்பாற்றப்பட்டது மிகுந்த ஆச்சரியம் அளித்துள்ளது. அந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்று பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா நாட்டின் ஆசாஸ் நகரில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் மீட்பு குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

உலகை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள்…. 3 லட்சத்தை தாண்டி போன கொடூரம்!

குடும்பத்தினர் சோகம்

அப்போது குழந்தை ஒன்று மாட்டிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மீட்பு படையினர் உள்ளே சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த குழந்தையின் மாமா அபு ஹூசம் வந்து வாங்கி சென்றார். அப்போது அவர் கூறுகையில், குழந்தையின் பெயர் ரகத் இஸ்மாயில். இவரது கர்ப்பிணி தாய் மற்றும் 5 வயது சகோதரி, 4 வயது சகோதரன் ஆகியோர் பலியாகி விட்டனர்.

சிரிய உள்நாட்டு போர்

தந்தையின் முதுகுப் பகுதி பலத்த காயம் அடைந்துள்ளது. சிரியாவில் 11 மாதங்கள் நடந்த போர் காரணமாக மோரெக் நகரில் இருந்து ஆசாஸ் நகருக்கு இடம்பெயர்ந்தோம். இது துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. எங்களுடன் மற்றொரு குடும்பத்தினருடன் இணைந்து வசித்து வந்தனர். அதில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆசாஸில் தஞ்சம்

சிரியாவில் போர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அரசு தரப்பிற்கும், பயங்கரவாத குழுவினருக்கும் இடையில் கடும் போர் மூண்டது. இதில் நாங்கள் பாதிக்கப்படக் கூடாது என்று தான் பலரும் சொந்த ஊரை விட்டு வெளியேறி இங்கே வந்து தஞ்சமடைந்தோம்.

துருக்கி நிலநடுக்கம்: 3 நாட்களுக்கு முன்பே கணித்த விஞ்ஞானி; பேரழிவு தொடருமாம்!

பலர் பாதிப்பு

இப்படி ஒரு இயற்கை பேரிடர் எங்கள் வாழ்வையே புரட்டி போடும் என எதிர்பார்க்கவில்லை. இந்த பச்சிளம் குழந்தை ரகத் இஸ்மாயில் தற்போது தாயை இழந்து தவித்து கொண்டிருக்கிறது. தந்தை பலத்த காயமடைந்துள்ளார். எங்களின் வீடு முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இனி நாங்கள் எங்கே செல்வோம். உள்நாட்டு போர் காரணமாக பலரும் இடம்பெயர்ந்து இங்கே வந்தனர்.

அவர்களின் நிலையை நினைத்து பார்த்தால் மிகவும் வேதனையாக இருப்பதாக அபு ஹூசம் தெரிவித்தார். சிரியாவில் பிரிவினைவாதிகள் கைப்பற்றி வைத்துள்ள பகுதிகளில் 430 பேரும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 530 பேரும் பலியாகியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.