கூட்டணி கட்சிக்கு எங்க ஓட்டு இனிக்கும், கொடி மட்டும் கசக்கும் – கொந்தளித்த திருமா..!

பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய
திருமாவளவன்
திடீரென ஆவேசமாகி திமுகவை மறைமுகமாக சாடிய பேச்சால் கூட்டணி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் தெற்கு வீதியில் விசிக நிர்வாகி கவியரசன் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சம்மந்தப்பட்டு இருப்பதாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, கவியரசன் குடும்பத்திற்கு விசிக சார்பாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை திருமாவளவன் வழங்கினார். பிறகு மேடையில் பேசிய திருமாவளவன், பாரதிய ஜனதா கட்சி ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்டி படுகொலைகளை செய்து அதன் மூலம் திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் செயல்களை செய்து வருகிறது. கிரிமினல்களை கட்சியில் சேர்ப்பதற்கு அச்சப்படாத கூச்சப்படாத கட்சி பாஜக. பாஜகவில் ஊடுருவியிலுள்ள கிரிமினல்களை திமுக அரசு கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியும்‌.திமுக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தடுக்க முடியும் என்றார்.

திமுக தலைமையில் வலுமையான கூட்டணி அமைய வேண்டும் என்பதில்
விடுதலை சிறுத்தைகள்
கட்சிக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை என்று கூறிய திருமாவளவன்; அந்த வகையில் கமலஹாசன் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தற்கு வரவேற்கிறோம். அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவை தனிமைப்படுத்தும் வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணை வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்த திருமாவளவன் கூட்டணி கட்சிகளை குறித்து பேசி ஆவேசமடைந்து, கூட்டணி கட்சி காரனுக்கு விசிக கொடி என்றால் கசப்பதாகவும், அதுவே எங்களது ஓட்டு மட்டும் இனிப்பதாகவும் கூறினார். மேலும், பல இடங்களில் கூட்டணி கட்சியினரே விடுதலை சிறுத்தைகள் கொடியை ஏற்ற விடுவதில்லை என்று பகிரங்கமாக குற்றசாட்டு வைத்தார். திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் திருமாவளவன் தொண்டர்கள் மத்தியில் இப்படி கூட்டணி கட்சியை சாடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதிமுக இன்று மதவாத சக்திகளின் பிடியில் சிக்கிக் கொண்டு மூன்று அணிகளாக பிரிந்து இருக்கிறது. பாஜக தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் இந்த கட்சி ஒரே கட்சியாக இருந்திருக்கும். அதிமுகவை இரண்டாக பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி அதிமுக தலைமையிலான அணியே இந்த இடைத்தேர்தலில் காணாமல் போய்விட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எதிரிகளை இல்லை என்ற கருத்து தற்போது திமுக கூட்டணிக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதிமுகவின் இந்த நிலைக்கு காரணம் பிஜேபியின் சதித்திட்டம் தான். இதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதிமுகவுக்கு நல்லது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தான் இருக்கிறது. திமுக கூட்டணியில் தான் தொடரும். திமுக கூட்டணி இன்னும் வலிமை பெறும். திமுக கூட்டணி தமிழகத்தில் 40க்கும் 40 வெற்றி பெறும். அதிமுகவை பலவீனபடுத்தி மத சக்தியாக இருக்கும் பாஜக இங்கு காலூன்ற நினைப்பது நல்லதல்ல. எனவே அதிமுக தன்னை வலுபடுத்திக் கொள்ளும் போது தான் பாஜகவை விரட்டி அடிக்க முடியும் என கூறினார். பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை பேசிய திருமாவளவன் திமுகவை உயர்த்தி பேசியும், அதே சமயம் மறைமுகமாக கண்டனத்தையும் தெரிவித்திருப்பது அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.