ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வெற்றியை தடுக்க முடியாது – செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவன் களமிறங்க உள்ளார். இந்தத் தேர்தலில், அதிமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிட உள்ளார். கடைசி நேரத்தில் தனது ஆதரவு வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் வாபஸ் வாங்கினார்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டு உள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும்.

திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். நாளை மறுதினம் (9 ஆம் தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.