துருக்கி நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைத்தவண்ணம் உள்ளது.
சிரியாவிற்கு அருகிலுள்ள தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது. பனிப்பொழிவால் சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களை விரைவாக கொண்டு செல்ல முடியவில்லை.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 தென்கிழக்கு மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் அதிபர் தாயிப் எர்டோகன்.