சென்னை: தமிழகத்தின் தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. விரைவில் கோடை வெயில் தொடங்க உள்ளது. அத்துடன், பள்ளி, கல்லூரிகளில் அடுத்த மாதம் முதல் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இதனால், தினசரி மின்தேவை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், 4,320 மெகாவாட் திறன் கொண்ட 5 அனல்மின் நிலையங்களில் தினமும் 3,900 மெகாவாட் வரை மின்னுற்பத்தி செய்யப்பட்டது. இதனால், நிலக்கரி கையிருப்பும் வேகமாக காலியாகி வருகிறது. இந்நிலையில், சீசன் இல்லாத நிலையிலும் காற்றாலை மூலம் தினசரி 1,000 முதல் 1,200 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது.
பொதுவாக, மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன் நிலவும். தற்போது முன்கூட்டியே காற்றாலையில் இருந்து தினசரி 1,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைப்பதால், நிலக்கரியை மிச்சப்படுத்த அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி குறைக்கப்படும்.