லக்னோ
உத்தர பிரதேசத்தில் காருக்கு அடியில் சிக்கிய ஒருவரது உடல், 10 கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் அரங்கேறிஉள்ளது.
புதுடில்லியில் கடந்த புத்தாண்டு அன்று இரவு, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் அஞ்சலி சிங் மீது, ஒரு கார் மோதியது.
இதில் காருக்குள் சிக்கிய அந்த பெண், 13 கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார்.
காருக்குள் இருந்தவர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்ததது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்திலும் அதுபோன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த வீரேந்திர சிங் என்பவர், நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு ஆக்ராவிலிருந்து நொய்டாவுக்கு காரில் சென்றார்.
மதுரா சுங்கச்சாவடி அருகே கார் வந்தபோது, அங்கிருந்தவர்கள் காரை நிறுத்தினர். காருக்கு அடியில் ஒரு உடல் சிக்கியுள்ளதாக தெரிவித்தனர்.
காருக்கு அடியில் பார்த்தபோது, முற்றிலும் சிதைந்த நிலையில், அடையாளம் காண முடியாத அளவுக்கு, ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், வீரேந்திர சிங்கை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, 10 கி.மீ., துாரத்துக்கு இந்த உடல் காருக்கு அடியில் சிக்கி இழுத்து வரப்பட்டதாக தெரிகிறது.
உயிரிழந்தவர் குறித்து விபரம் தெரியவில்லை.
வீரேந்திர சிங் ஓட்டி வந்த கார் மோதியதால் இந்த நபர் உயிரிழந்தாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, காரை ஓட்டி வந்த வீரேந்திர சிங் கூறியதாவது:
அதிகாலையில் பனி மூட்டமாக இருந்ததால், காருக்கு அடியில் உடல் சிக்கியிருந்தது எனக்கு தெரியவில்லை.
மேலும், என் கார் மீது மோதியதால் இவர் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறு.
ஏற்கனவே பல வாகனங்கள் இந்த உடல் மீது மோதியதாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்