புதுடெல்லி: டெல்லியின் சங்கம் விஹார் பகுதியை சேர்ந்தவர் வீரேந்தர் சிங். இவர் தனது குடும்பத்தினருடன் ஆக்ராவில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றார். அங்கிருந்து நேற்று அதிகாலை குடும்பத்தினருடன் காரில் டெல்லி திரும்பினார். வீரேந்தர் சிங் காரை ஓட்டினார். அவருடன் ஒரு ஆண், 2 பெண்கள் காரில் பயணம் செய்தனர்.
உத்தர பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் மான்ட் சுங்கச் சாவடியில் அதிகாலை 4 மணிக்கு அவரது கார் வந்தது. அப்போது கார் மற்றும் சாலையில் ரத்த கறை இருப்பதை சுங்கச்சாவடி ஊழியர் கவனித்தார். காரின் பின்பகுதியை அந்த ஊழியர் பார்த்தபோது ஓர் இளைஞரின் உடல் காரில் இழுத்து வரப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், காரை ஓட்டி வந்த வீரேந்தர் சிங்கிடம் விசாரணை நடத்தினர். அவர் போலீஸில் கூறும்போது, “பனிமூட்டம் காரணமாக சாலையில் எதுவும் தெரியவில்லை. இளைஞரின் உடல் எவ்வாறு காரில் சிக்கியது என்பது தெரியவில்லை. வேறு வாகனத்தில் அடிபட்டவரின் சடலம் சிக்கி இருக்கலாம்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு இளைஞரின் உடல் காரில் இழுத்து வரப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்த இளைஞர் யார் என்பது தெரியவில்லை. அவரது சட்டை பையில் 500 ரூபாய் நோட்டும் உடைந்த செல்போன் பாகங்களும் இருந்தன. சிம் கார்டை காணவில்லை.இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.