தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: காப்பகத்தில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு – நடந்தது என்ன?!

தென்காசியில் கடத்தப்பட்ட தன் காதல் மனைவியை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்று தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் வினித் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் நான், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வருகிறேன்.

இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்த நவீன் பட்டேல் மகள் கிருத்திகா பட்டேலும் நானும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தோம். இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்

மதுரை உயர் நீதிமன்றம்

இதற்கிடையில் தன் மகளைக் காணவில்லை என நவீன்பட்டேல் குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்ததால் கடந்த ஜனவரி 4-ம் தேதி என் மனைவியுடன் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜரானோம். விசாரணையில் கணவரான என்னுடனே செல்வதாக கிருத்திகா பட்டேல் கூறியதால் நான் அழைத்து வந்தேன்.

கடந்த 14-ம் தேதி என் மனைவியுடன் தென்காசியில் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வந்த நவீன்பட்டேல் மற்றும் அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் என்னுடன் தகராறில் ஈடுபட்டனா். இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன். இந்த புகாா் மனு மீதான விசாரணைக்காக கடந்த ஜனவரி 25-ம் தேதி என் மனைவி, தந்தை, சகோதரருடன் குற்றாலம் காவல் நிலையத்தில் ஆஜரானேன்.

மணப்பெண் கிருத்திகாவுடன் மாரியப்பன் வினித்

ஆனால், நவீன்பட்டேல் மாலையில் காவல்நிலையம் வருவதாகக் கூறியுள்ளாா். அதோடு என் குடும்பத்தினருடன் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, நவீன்பட்டேல், அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் வழியில் என்னை தாக்கி என் மனைவி கிருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர்.

இது குறித்து உடனே குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தேன். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், கிருத்திகா பட்டேல்லை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் கிருத்திகா பட்டேலை கடத்தி சென்று விட்டனர். எனவே, குருத்திகா பட்டேலை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இதற்கிடையே “தனக்கும் மைத்ரிக் பட்டேலுக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது. நான் நன்றாக, பாதுகாப்பாக இருக்கிறேன்” கிருத்திகா பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “மனுதாரரின் புகாரின் அடிப்படையில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடி வருகிறோம். கடத்தப்பட்ட பெண்ணை மீட்க 2 தனிப்படையினர் குஜராத் சென்றுள்ளனர்” என அரசு தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.

வினித்-கிருத்திகா

இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிருத்திகா பட்டேலை தென்காசி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது காவல்துறை தரப்பில், “கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்டதில் இருவேறு கதைகள் உள்ளது. பெண் விசாரணை அதிகாரி முன்பு அவர் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும்.” என்றனர்.

இதனையடுத்து நீதிபதிகள், “மனுதாரர் திருமணம் செய்ததற்கான ஆவணங்கள் உள்ளதா? மனுதாரரின் வயது என்ன?” என்று கேட்க, மனுதாரர் தரப்பில், “மனுதாரருக்கு 22 வயது” என்று கூறப்பட்டது.(திருமணம் நடந்ததற்கான புகைப்படம் தாக்கல் செய்யப்பட்டது)

இதனையடுத்து, “குஜராத்தில் திருமணம் செய்த மைத்திரிக் பட்டேல் கைது செய்யப்பட்டாரா?” என்று நீதிபதிகள் கேட்டதற்கு, “தலை மறைவாக உள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.

வினித்துடனான திருமண புகைப்படங்கள் காட்டி கிருத்திகாவிடம் நீதிபதிகள் விசாரணை செய்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும். கிருத்திகாவை இரண்டு நாள்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும்.

உயர் நீதிமன்றக் கிளை

கிருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம். கிருத்திகாவை அவர் பெற்றோர் பார்க்க அனுமதிக்க வேண்டும். அதேநேரம் பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி பிப்ரவரி 13 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் கிருத்திகா பட்டேலின் பெற்றோர் மற்றும் உறவினர் 8 பேர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் ஒருவாரம் ஒத்தி வைத்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.