முக்கிய திருப்பம்..!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக விலகல்..!!

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ந் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள்.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன. அது போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் 29 வயதான சிவபிரசாந்த் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் தென்னரசு என்பவர் அறிவிக்கட்டுள்ளார்.

இந்த சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று மாலை நிறைவு பெற்றது. 70-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 10-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பபெறலாம், அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் கழகம் போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கழகத்தின் சார்பில் 27.01.2023 மற்றும் 31.01.2023 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று பதிலளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுத்தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நமது வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம்.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.