உச்ச நீதிமன்றம் உத்தரவு அதானி முறைகேடு விவகாரம் நாளை மறுநாள் விசாரணை

புதுடெல்லி: அதானி குழும முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை வரும் 10ம் தேதி, அதாவது நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை ஜனவரி 24ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து அதானி நிறுவனம் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த இரண்டு நாட்களாக முழுமையாக முடங்கியது.

மேலும் இந்த ஆய்வறிக்கையால் அதானி நிறுவனமும் சர்வதேச அளிவில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதில் ஹிண்டென்பர்க் அறிக்கையில் உள்ள அனைத்தும் பொய்கள் எனவும், இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும் அதானி குழுமம் பதில் அளித்தது மட்டுமில்லாமல், அதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா நேற்று ஒரு முறையீட்டை வைத்தார்.

அதில், ‘‘அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விவகாரங்களை முறையாக விசாரிக்க வேண்டும். மேலும் முதலீடு செய்தவர்களுக்கு சரியான இழப்பீட்டை பெற்றுத்தரவேண்டும். குறிப்பாக ஹிண்டன்பர்க் நிறுவனத்திடம் விசாரணை நடத்த வேண்டும். இதுதொடர்பான விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். அதனை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, அதானி குழுமம் தொடர்பான மனுவை வரும் 10ம் தேதி பட்டியலிட்டு விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.