வாஷிங்டன்: உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இந்திய-அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகம் (13) தொடர்ந்து 2-வது முறையாக இடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ‘ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் பார் டேலன்டடு யூத்’ (சிடிஒய்). ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிடிஒய் ஒரு தேர்வை நடத்தி பிரகாசமான மாணவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பயிலும் வகுப்புக்கும் மேற்பட்ட வகுப்புகளுக்குரிய பாடதிட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் 76 நாடுகளைச் சேர்ந்த 15,300 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 27 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே உலகின் திறமையான மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். சிடிஒய் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இதில் இந்திய-அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகமும் தொடர்ந்து 2-வது முறையாக இடம் பிடித்துள்ளார். கடந்த 2021 தேர்விலும் இவர் இடம்பிடித்துள்ளார். மற்ற மாணவர்களைவிட இவர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் நியூஜெர்சியில் உள்ள பிளாரன்ஸ் எம்.கவுதினீர் நடுநிலைப் பள்ளியில் படிக்கிறார். நடாஷாவின் பெற்றோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுகுறித்து நடாஷா கூறும்போது, “நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையதளத்தில் மூழ்கி இருப்பேன். அத்துடன் ஜேஆர்ஆர் டோல்கீன்ஸின் நாவல்களை படிப்பேன்” என்றார்.
இதுகுறித்து சிடிஒய் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டு, அமெரிக்க கல்லூரிகளில் சேர்வதற்காக எஸ்ஏடி, ஏசிடி தேர்வுகள், பள்ளி மற்றும் கல்லூரி திறன் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் நடாஷா மிகச்சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி பட்டியலில் முன்னிலை பெற்றார்” என கூறப்பட்டுள்ளது.