அமராவதி: ஆந்திராவில் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. தற்போது 8 தேதி ஆகியும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இன்னமும் சம்பளம் வழங்கப்படவில்லை. பல ஒப்பந்த ஊழியர்களுக்கு சுமார் 4 முதல் 6 மாதம் வரை அரசு சம்பள பாக்கி வைத்துள்ளதால், அவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குப்பை அள்ளும் லாரி ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு சுமார் 6 மாதமாக ஊதியம் வழங்காததால், அவர்கள் எந்நேரமும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
மாதந்தோறும் ஆந்திர அரசு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கி செலவுகளை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. ரவீந்திர குமார் ஆந்திர அரசின் கடன் குறித்து நேற்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டைவிட தற்போது ஆந்திராவின் கடன் இரட்டிப்பாகி உள்ளது. கடந்த 2019-ல் ஆந்திர அரசின் கடன் ரூ.2,64,451 கோடியாக ஆக இருந்தது. இது 2020-ம் ஆண்டில் ரூ.3,07,671 கோடியாக உயர்ந்தது. 2021-ம் ஆண்டில், இது ரூ.3,53,021 கோடியானது. 2022-ம் ஆண்டு இது ரூ.3,93,718 கோடியாக இருந்தது. 2023 பட்ஜெட் நிலவரப்படி ரூ.4,42,442 கோடியாக உள்ளது. ஆக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.45 ஆயிரம் கோடியை ஆந்திர அரசு கடன் வாங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.