`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
கேள்வி: டாக்டர், எனக்கு 37 வாரத்தில டெலிவரி ஆயிடுச்சு. பிறக்கும்போது, மகனோட எடை 2.550 கிலோவா இருந்துச்சு. நாலாவது நாள் டிஸ்சார்ஜ் ஆனபோது, அவனோட எடை 2.4 கிலோ. அவனோட எடை எப்ப அதிகரிக்க ஆரம்பிக்கும்? ஒரு நாளைக்கு எவ்வளவு எடை ஏறணும்? தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்குதான்னு எப்படித் தெரிஞ்சுக்கிறது?
அனைத்து குழந்தைகளுக்கும், முதல் வாரத்தில் நீரிழப்பின் காரணமாக எடையிழப்பு ஏற்படும். முதல் 7 நாள்களில் நிறைமாத பச்சிளங்குழந்தைகள் தனது எடையில் 7-10% வரையும், குறைமாத பச்சிளங்குழந்தைகள் தனது எடையில் 15% வரையும் இழப்பார்கள். முதல் வாரத்திற்குப் பிறகு, எடை கூட ஆரம்பித்து 10-14 நாள்கள் முடிவில், தனது பிறந்த எடையை அடைவார்கள். எனவே, உங்கள் குழந்தையின் எடையிழப்பு இயல்பானதே. எனினும், எடையிழப்பு ஒரே நாளில் 2% -க்கு மேல் இருந்தால், தாய்ப்பால் சரியாகக் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
முதல் சிலநாள்களில், தாய்ப்பால் கொடுக்கும் நிலை அல்லது இணைப்பு சரியாக இல்லாத காரணத்திலாலோ அல்லது குறைந்தளவு தாய்ப்பால் சுரப்பினாலோ போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்காமல், அதிகளவு எடையிழப்பு ஏற்படலாம். ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கும் பட்சத்தில், குழந்தையானது 6-8 முறை சிறுநீர் கழிக்கும்; 2-3 மணி நேரம் நன்றாகத் தூங்கும்; முதல் வார எடையிழப்பிற்குப் பிறகு 2-வது வாரத்திலிருந்து நாளொன்றுக்கு 20-30 கிராம் எடை கூடும்; குறைமாத பச்சிளங்குழந்தைகள் 15-20 g/kg/day என்ற விகிதத்தில் எடை கூடுவார்கள்.
குழந்தையின் வளர்ச்சி போதுமான அளவு இருக்கிறதா என்பதை அறிய வளர்ச்சி விளக்கப்படங்களை (Growth Charts) நீங்கள் உபயோகப்படுத்தலாம். எடை, நீளம், தலையின் சுற்றளவு (மூளையின் வளர்ச்சியைக் கண்டறிய) என்று குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி அளவுருவையும் கண்காணிக்க உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தயாரிக்கப்பட்ட வளர்ச்சி விளக்கப்படங்கள் உலகம் முழுதும் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
இந்த வளர்ச்சி விளக்கப்படங்களை உலக சுகாதார நிறுவனத்தின் வலைதளத்திலிருந்து நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். வீட்டிலேயே, குழந்தையின் எடையைத் துல்லியமாக அளவிடக்கூடிய டிஜிட்டல் எடை பார்க்கும் எந்திரங்கள் ஆன்லைன் மற்றும் கடைகளில் கிடைக்கின்றன.
எனினும், குழந்தையின் டிஸ்சார்ஜுக்கு பிறகு ‘follow-up’ வருகையின் போதும், ஒவ்வொரு தடுப்பூசி வருகையின் போதும், பெரும்பான்மையான மருத்துவமனைகளில், குழந்தையின் எடை, நீளம் போன்றவை அளவிடப்பட்டு வளர்ச்சி விளக்கப்படங்களில் குறிக்கப்படுவதால், குழந்தை நல மருத்துவர்கள் பொதுவாக பெற்றோரிடம், வீட்டிலேயே குழந்தையின் எடையை அளக்க டிஜிட்டல் எடை பார்க்கும் எந்திரம், நீளத்தை அளக்க இன்ஃபான்டோமீட்டர் (Infantometer) போன்றவற்றை வாங்கிட அறிவுறுத்துவதில்லை. மாறாக, குறைமாத பச்சிளங்குழந்தைகளில் எடை போதுமான அளவு கூடாத பட்சத்தில், அல்லது பெற்றோர் தன் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கின்றதா என கண்காணிக்க விரும்பும் பட்சத்தில் இந்த உபகரணங்களை உபயோகப்படுத்தலாம்.
குறைமாத பச்சிளங்குழந்தைகளுக்கான வளர்ச்சி விளக்கப்படங்கள்:
நிறைமாதத்தில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்குத்தான் உலக சுகாதார நிறுவனத்தின் வளர்ச்சி விளக்கப்படங்களை உபயோகப்படுத்த வேண்டும். மாறாக குறைமாதத்தில் பிறந்திருந்தால், பிறந்தபோதான எடையைப் பொறுத்து பல்வேறு வளர்ச்சி விளக்கப்படங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன்.
பிறந்தபோதான எடை 1.5 முதல் 2.499 கிலோ வரை இருக்கும் பட்சத்தில் Fenton Chart-ஐ உபயோகப்படுத்தலாம்; மாறாக, பிறந்தபோதான எடை 1.5 கிலோவிற்கு கீழிருந்தால் Wright’s Chart அல்லது Ehrenkranz’ Chart-ஐ உபயோகப்படுத்தலாம். குறைமாத பச்சிளங்குழந்தைகளின் Corrected Gestational வயது, 40 வாரங்களை அடைந்த பிறகு, உலக சுகாதார நிறுவனத்தின் வளர்ச்சி விளக்கப்படங்களை உபயோகப்படுத்தலாம்.
உதாரணமாக, ஒரு குழந்தை 35 வாரத்திலேயே பிறக்கிறது, அதன் பிறந்த எடை 2.2 கிலோ இருக்கிறதென்றால், தொடக்கத்தில் Fenton Chart-ம், 5 வாரத்திற்குப் பிறகு (அப்போது Corrected Gestational Age, 35+5 = 40 வாரத்தை அடைந்திருக்கும்) WHO Growth Charts-ஐ உபயோகப்படுத்த வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் நிலை மற்றும் இணைப்பு:
தாய்ப்பால் கொடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நான்கு நிலைகள் (Four steps of Positioning):
1) குழந்தையின் உடல் நன்றாக அணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2) குழந்தையின் தலை, கழுத்து மற்றும் முதுகு ஆகியவை சம தளத்தில் இருக்க வேண்டும்.
3) குழந்தையின் முழு உடலும் தாயை நோக்கி இருக்க வேண்டும்.
4) குழந்தையின் வயிறு தாயின் வயிற்றை அணைத்திருக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நான்கு இணைப்பு படிகள் (Four steps of Attachment):
1) குழந்தையின் வாய் நன்றாகத் திறந்திருக்க வேண்டும்.
2) குழந்தையின் கீழ் உதடு வெளிப்புறமாகத் திரும்பியிருக்க வேண்டும்.
3) குழந்தையின் தாடை தாயின் மார்பகத்தை அணைத்திருக்க வேண்டும்.
4) தாயின் மார்பக காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டத்தின் (Areola) பெரும்பாலான பகுதி குழந்தையின் வாயினுள் இருக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் நான்கு நிலைகள் மற்றும் நான்கு இணைப்பு படிகளை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு 2-3 மணிநேரத்திற்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒரு மார்பகத்திலுள்ள தாய்ப்பால் முழுமையாக் கொடுத்து முடித்த பிறகு, அடுத்த மார்பகத்தில் கொடுக்க வேண்டும்.
குழந்தை பசியாறி விட்டால், தானாகவே மார்பகத்திருந்து தனது வாயை எடுத்து விடும். அதன்பிறகு நன்றாக 2-3 மணிநேரம் தூங்கும். அடுத்த முறை, பாதியிலே விடுபட்ட மார்பகத்திருலிருந்து தாய்ப்பால் கொடுக்கத் தொடங்க வேண்டும். குழந்தை அழுத பிறகு மட்டுமே தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்பதில்லை. குழந்தை பசியிலிருப்பதை சில சமிக்ஞைகள் (Baby feeding cues) மூலம் அறியலாம்.
தொடக்கத்தில், வாயை அகலமாகத் திறக்கும், தலையை ஒரு பக்கமாகத் திருப்பி, தாயின் மார்பகத்தைத் தேடும் (Seeking/rooting); பசி மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் கைகளை விரிக்கும், உடல் அசைவுகளை அதிகரிக்கும், கையை, வாயை நோக்கி கொண்டு செல்லும்; இறுதியாக அழ ஆரம்பிக்கும். குழந்தை பசியிலிருப்பதை ஆரம்ப சமிக்ஞைகளிலே அறிந்து கொண்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இந்த சமிக்ஞைகள் எதுவும் இல்லையென்றாலும் கண்டிப்பாக 2-3 மணிநேரத்திற்கு ஒரு முறை குழந்தையை எழுப்பி தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; ஒரு நாளைக்கு 8-12 முறை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
அடுத்த வாரம்…. தாய்ப்பால் எவ்வாறு சுரக்கிறது, தாய்ப்பால் போதுமான அளவு சுரக்காத தாய்மார்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.
பராமரிப்போம்…