தென்காசி மாவட்டம் கொட்டா குளத்தை சேர்ந்த வினித் என்பவர் தனது மனைவி குருத்திகா கடத்தப்பட்டது குறித்து ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் இலஞ்சியை சேர்ந்த குருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் தன்னை தாக்கி விட்டு குருத்திகாவை கடத்திச் சென்று விட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இது தொடர்பான புகாரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குருத்திகாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இதனை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவு பேரில் குருத்திகாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த பொழுது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குருத்திகா நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
அப்பொழுது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கிருத்திகாவை 3 நாட்கள் காப்பகத்தில் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் மூன்று நாட்களுக்கு பிறகு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர்.
மேலும் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.