ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர மற்ற நாட்களில் தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், அ.ம.மு.க வேட்பாளர் சிவபிரசாந்த், தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் உள்பட மொத்தம் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன் தினம் ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நேற்று 7-வது நாளாக வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வழக்கம் போல் சில சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் வேட்பு மனு தாக்கல் செய்ய மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
மாநகராட்சி அலுவலகத்திற்குள் அவர்கள் சான்றிதழ் சரிபார்க்க ப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் கட்சி என்ற இடத்தில் அ.தி.மு.க. என்றும், சின்னம் என்ற இடத்தில் இரட்டை இலை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்ந்து மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. அதன் பிறகு வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் அனுமதிக்கப்படவில்லை. வேட்பு மனுக்கள் மீது இன்று (பிப்ரவரி 8ஆம் தேதி) பரிசீலனை நடைபெறுகிறது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதனைத்தொடர்ந்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் யார், யார் எந்த சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்கிற விவரமும் வெளியிடப்படும்.
அதனைத்தொடர்ந்து வருகிற 27-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று மதியத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.
நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மனுதாக்கல் செய்ய வந்ததால் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் பலத்த போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது.