ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் ஒட்டகங்களை மேய்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு ஒட்டகம் அவரின் தலையை கடித்து இழுத்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். உரிமையாளரைக் கொன்ற ஒட்டகம் தொடர்பான தகவல் அந்தப் பகுதியில் தீயாய் பரவ, சம்பவ இடத்துக்கு மரணித்தவரின் உறவினர்கள் வந்திருக்கின்றனர். பின்னர், அந்த ஒட்டகத்தை மட்டும் தனியே ஒரு மரத்தில் கட்டி வைத்து பாதிக்கப்பட்டவரை சிகிச்சைகாக கொண்டு செல்ல முயன்றிருக்கின்றனர்.
ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதை அறிந்தவர்கள், ஆத்திரம் தாங்காமல், அந்த ஒட்டகத்தை கட்டையால் அடித்து அதன் தலையை சிதைத்து கொன்றிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒட்டகத்தை கொன்றது தொடர்பாக கிராம வாசிகளிடம் கேட்கப்பட்டபோது,” ஒட்டகத்துக்கு மன நலம் சரி இல்லை.
அதனால் தான் யார் என்றே தெரியாமல் அது தாக்கத் தொடங்கும். அதன் காரணமாகதான் அதன் உரிமையாளரைக் கொன்றது. அதை அப்படியே விட்டால் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அதைக் கொன்றோம்” என்றிருக்கிறார். இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.