டெல்லி: வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட்டுக்கு பிறகு இந்தாண்டு முதல் முறையாக வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார். கடந்தாண்டு 5 முறை என 2.25 சதவீதம் வரை வட்டி விகிதம் உயர்ந்த நிலையில் இந்தாண்டு 0.25 சதவீதம் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. 2022 மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் வரை என 6 முறை உயர்த்தியுள்ளது.
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயர்கிறது:
ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தனிநபர், வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் மேலும் உயரும். வீடு, வாகன கடன் வட்டி அதிகரிக்கப்பட்டதால் மக்களின் வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் உயரும். பணவீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும்:
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதால் இந்தியாவின் வளர்ச்சியும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி நிர்ணயித்து இருந்த 6 சதவீதத்துக்குள் பணவீக்கம் உள்ள நிலையில் வட்டி விகிதம் உயர்ந்தப்பட்டுள்ளது. வட்டி உயர்வு கடன் வாங்கியவர்களுக்கு சாதகமில்லை, டெபாசிட் செய்தவர்களுக்கு சாதகமாக உள்ளது.