தூத்துக்குடி: விசை படகு உரிமையாளர்கள் தங்களிடம் வட்ட பணம் என்ற பெயரில் 10% அதிகமாக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டி தூத்துக்குடி மீன்பிடி தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடி தொழிலில் லாபம் மற்றும் நட்டத்தில் விசை படகு உரிமையாளர்களுக்கு 61%, தொழிலாளர்களுக்கு 31% என்ற விகிதத்தில் பங்கு தொகை பிரிக்கப்படுகிறது. ஆனால், அண்மை காலமாக வட்டப்பணம் என்ற பெயரில் கூடுதலாக 10 முதல் 15% தொகையை விசை படகு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர் என்பது மீன்பிடி தொழிலாளர்களின் குற்றச்சாட்டாகும்.
கூடுதலான வட்டப்பணம் வசூலால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும் மீன்பிடி தொழிலாளர்கள் 6% மட்டுமே வட்டப்பணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குனர் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தூத்துக்குடி விசை படகு தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மீன்பிடிக்க செல்லப்போவதில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.