சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இபிஎஸ் அளித்த நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கும். இதன்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலையும், தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 20 பேர் கொண்ட பட்டியலையும் அளிக்கலாம்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இபிஎஸ் அளித்த நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை ஏற்றுக் கொண்டுள்ளனது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட 40 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.