முதல்வரின் கல்லூரி தோழர்:
தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் டி.பி.கஜேந்திரன் (68). இவர் சென்னை சாலிகிராமத்தில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். குறிப்பாக இவர் ஏற்று நடித்து வந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர பாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதற்கிடையில் கஜேந்திரனுக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டது. இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்தார்.
இந்நிலையில் 05-02-2023 அன்று, காலை காலமானார். சாலிகிராமத்தில் இருக்கும் அவரின் இல்லத்தில் நடந்த இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சியினர், திரையுலகினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கல்லூரித் தோழர் ஆவர். எனவே முதல்வருக்கு அவரின் மரண செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
“நடிகராக 100-க்கும் மேற்பட்ட படங்கள்..”
இதுகுறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “எனது கல்லூரித் தோழனான டி.பி.கஜேந்திரனின் மறைவு, எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. கலையுலகுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்” என்றார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என டி.பி.கஜேந்திரன் பன்முகம் கொண்டவர். குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் ஈட்டிக் கொடுத்த இயக்குநர்களின் பட்டியலில் கஜேந்திரனுக்கு முக்கிய இடம் உண்டு என்கின்றனர் திரையுலகினர். கே. பாலசந்தர், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கஜேந்திரன், 1988-ம் ஆண்டு வீடு, மனைவி, மக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து, எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவன், பட்ஜெட் பத்மநாதன், சீனா தானா 007 உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டும் இல்லாது பெரும்பாலான முக்கிய நட்சத்திரங்களுடன் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானது தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “முதல்வர் மு.க.ஸ்டாலினும், நடிகர் டி.பி.கஜேந்திரனும் ஒன்றாக சென்னை மாநில கல்லூரியில் படித்தவர்கள். அப்போது தொடங்கிய அந்த ஆத்மார்த்தமான நட்பு இறுதி வரை தொடர்ந்து இருந்து வந்தது. ஆனால் இருவரும் அதை பெரிய அளவில் வெளிக்காட்டிக்கொண்டது இல்லை. இருவரின் வீட்டிலும் நடக்கும் சுப, துக்க காரியங்களில் பங்கெடுத்துக் கொள்வார்கள்.
குறிப்பாக கஜேந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது முதல்வர், சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுபோல் ஏராளமான விஷயங்களை நாம் நினைவு கூற முடியும். இவ்வாறு இருவரும் நல்ல தோழர்களாக இருந்த நிலையில் தான் டி.பி.கஜேந்திரன் மறைவெய்திவிட்டார். இது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகுந்த மனக்கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதவிர டி.பி.கஜேந்திரனுக்கு கலைஞருடனும் நல்ல நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது” என்றார்.