துணிவு படம் முடிந்த கையோடு அஜித்தின் அடுத்த படத்துக்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்கப்போவதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருந்தது.
ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் விலகியதை ஏகே 62 படத்தை யார்தான் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி சினிமா வட்டாரத்துக்குள்ளேயே எழுந்திருக்கிறது.
இதனிடையே தடையறத்தாக்க, தடம், மீகாமன், கலகத் தலைவன் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் மகிழ் திருமேனி லண்டன் சென்று அஜித்திடமும், லைகா நிறுவனத்திடமும் கதையைச் சொல்லி ஓகே செய்திருப்பதோடு அதற்கான அட்வான்ஸ் பணத்தையும் அவருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரபரத்தன.
இதனடிப்படையில் படத்தின் வேலைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்கினால் 2023ம் ஆண்டு இறுதிக்குள்ளோ அல்லது 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கோ வெளியாகலாம் என்றும் பேசப்பட்டு வந்தன. ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இருக்காததால் ரசிகர்கள், சினிமா பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் என பலரும் ஏகே 62க்கான அப்டேட்டுக்காக கண் கொத்தி பாம்பு போல எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
#AK62 | #VP narrated a script. #MagizhThirumeni already.
Official announcement ??? @LycaProductions
— Ponmanaselvan S (@IamSellvah) February 7, 2023
இந்த நிலையில், அஜித்தின் சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்த, ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கும் மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவும் அஜித்திடம் அவருக்கான கதையை சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் நாகசைதன்யாவை வைத்து வெங்கட் பிரபு ஏற்கெனவே படம் இயக்கிக் கொண்டிருப்பதால் அஜித்துடனான கூட்டணிக்கு இப்போது வாய்ப்பிருக்காது என்றும் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் ஏகே 62 குறித்த அறிவிப்பை இந்த வார இறுதிக்குள் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியிருப்பதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எகிறியிருக்கிறது என்றே கூறலாம்.