புதுடெல்லி: பாஜ அரசு தாக்கல் செய்யும் ஒவ்வொரு பட்ஜெட்டும் ஏழை மக்களின் நலனை மையமாக கொண்டதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றாம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக பாஜ நாடாளுமன்ற கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அடுத்த மக்களவை தேர்தலுக்கு முந்தைய கடைசி மற்றும் முழுஅளவிலான பட்ஜெட்டாக இருந்தாலும் இதனை யாரும் தேர்தல் நோக்கம் கொண்ட பட்ஜெட் என்று அழைக்கவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் நலன்களுக்கான அனைத்து முன்மொழிவுகளும் பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்தன. பாஜ அரசு தாக்கல் செய்யும் ஒவ்வொரு பட்ஜெட்டும் ஏழை மக்கள் நலனை மையமாக கொண்டதாகவே இருக்கும். நகரங்களில் இருக்கும் இளைஞர்கள் விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. எனவே நகரங்களில் இருக்கும் எம்பிக்கள் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.