சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:
*தேசிய நெடுஞ்சாலைகளின் வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆப்டிகல் பைபர் கேபிள்கள், சாலை விரிவாக்கத்தின் போது பாதிக்கப்படாமல் இருப்பதை அமைச்சகம் எப்படி உறுதி செய்கிறது? மேலும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்ந்த திட்டங்களின் போது அமைக்கப்படும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுமா அல்லது தனியார் ஆபரேட்டர்களுக்கும், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் குத்தகைக்கு விடப்படுமா?

*பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை குறித்து உங்களது பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு நீண்ட நாட்களாக உங்களிடம் முன்வைத்து வரும் கோரிக்கையை நினைவூட்ட விரும்புகிறேன். சமீபத்தில் சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வழித்தடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக அனைத்து நிலங்களும் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், உங்களது ஒப்பந்ததாரர்கள் ஏதேதோ காரணங்களை சொல்லி நீதிமன்றத்திற்கு சென்று காலம் தாழ்த்தி வருகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. 100 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே, கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் ஆகிறது. மேலும் சாலை சிதிலமடைந்து பரிதாபகரமான நிலையில் உள்ளது. வழக்கம்போல் இது எங்கள் தவறு அல்ல, ஒப்பந்ததாரர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வேலை தாமதமாக நடைபெறுகிறது என்று ஒன்றிய அரசு கூறுமா? இது என்ன மாதிரியான செயல்முறை? இதுபோன்ற பிரச்னைகளை  சமாளிக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன? ஒரு சாமானியன் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? ஒன்றிய அரசும், ஒப்பந்ததாரர்களும் இணக்கமான முடிவுக்கு வரமுடியாத காரணத்திற்காக தமிழ்நாடு மக்கள் ஏன் பாதிக்கப்படவேண்டும்? எனவே இந்த திட்டங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவுபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

* மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: பா.ஜ எம்பி பேச்சு
மக்களவையில் நேற்று மபி மாநிலம் ரத்லாம் தொகுதி பா.ஜ எம்பி ஜிஎஸ் தாமோர் பேசியபோது,’ பழங்குடியினர், மலைவாழ் மக்கள் உள்பட சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பிரதமர் மோடி உழைக்கிறார். எனவே பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.