புதுச்சேரி: துறை ரீதியிலான போட்டித் தேர்வு நடத்தி உதவியாளர் தேர்வு செய்யலாம் என்ற ஆளுநரின் ஒப்புதலுக்கு எதிராக தலைமைச் செயலகத்தில் முற்றுகை போராட்டத்தால் தலைமைச் செயலரின் காரை 2 மணி நேரமாக எடுக்க முடியவில்லை. யூபிஎஸ்சி-யில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தடிதம் எழுதுவதாக போராட்டம் நடத்திய அமைச்சக ஊழியர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உறுதி தந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகே காரில் ஏறி மதிய உணவுக்கு அவர் புறப்பட்டார்.
புதுவை அரசு சார்பில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கக்கூடாது. ஊழியர்களுக்கு பதவி உயர்வு தந்தால் நூற்றுக்கணக்கில் காலியாகும் எழுத்தர் காலியிடங்களில் புதுச்சேரி இளையோர் இடம் பெற முடியும் என்று தெரிவித்தது. அமைச்சக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பணிமூப்பு அடிப்படையில் உதவியாளர் பதவிகளை நிரப்ப கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் உதவியாளர் தேர்வு அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது பணியில் உள்ளோருக்கு துறை ரீதியிலான போட்டித் தேர்வு நடத்தி உதவியாளர் தேர்வு செய்ய துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரை இல்லாமல் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் தலைமை செயலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
போராட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைமை செயலக நுழைவுவாயில் தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நுழைவாயில் முன்பே தலைமைச் செயலர் ராஜீவ்வர்மாவின் கார் நின்றிருந்தது. போராட்டக்காரர்கள் கார் முன்பே அமர்ந்திருந்ததால் எடுக்க முடியவில்லை. உணவு இடைவேளைக்கு தலைமைச் செயலரால் புறப்பட முடியவில்லை. இதையடுத்து நிர்வாகிகளை அழைத்து தலைமைச் செயலர் பேசினார்.
மொத்தமாக இரண்டு மணி நேரம் போராட்டம் நடந்தது. அதன் பிறகே தலைமைச் செயலர் காரில் புறப்பட்டார். போராட்டம் தொடர்பாக சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், “தலைமைச் செயலர் அழைத்து பேசியபோது இந்திய அரசின் விதிமுறைக்கு மாறாக புதுச்சேரியில் அறிவிப்புகள் வெளியாவதை தெரிவித்தோம். அவர் புதுச்சேரிக்கு விலக்கு தருவது தொடர்பாக யூபிஎஸ்சிக்கு கடிதம் எழுதுவதாக தெரிவித்தார்.
உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பினால் காலியாகும் எழுத்தர் பணியிடங்களில் புதுச்சேரி மக்கள் வேலைவாய்ப்பு உறுதியாகும். குருப் சியில் இடஒதுக்கீடு உள்ளது. இத்தேர்வில் நாடு முழுவதும் இருந்து பங்கேற்க இயலாது” என்று குறிப்பிட்டார்.