தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் மரத்தூண்டி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவருடைய மகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்”திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் 460 கோவில்களுக்கு குடமுழுக்கு திருவிழா நடத்தப்பட்டுள்ளது.
சங்கரநாதர் திருக்கோவிலில் உள்ள தங்கத்தேர் மற்றும் மரத்தேர்களை ஆய்வு செய்த பிறகு அங்குள்ள தெப்பக்குளத்தையும் ஆய்வு செய்தேன்.
அந்த தெப்பக்குளம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதனை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தேன்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூபாய் 90 லட்சம் செலவில் அந்த தெப்பக்குளத்தை சீரமைக்க திட்டமிட்டுள்ளோம்” என பேசினார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் “பிப்ரவரி 14 என்றால் காதலர் தினம் தான் ஞாபகம் வரும். ஆனால் மத்திய அரசு நேற்று பிப்ரவரி 14 அன்று பசுவை தழுவ வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்தை என்ன..? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு “காலம் காலமாக காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை இது போன்ற உத்தரவால் தடுக்க முடியாது. ஆகவே காதலர் தினம் என்பது அனைவராலும் நேசித்துக் கொண்டாடப்படுகின்ற தினம். வரம்பிற்கு உட்பட்டு அனைவராலும் அந்த தினம் கொண்டாட வேண்டும்” என செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்தவாறு அமைச்சர் சேகர்பாபு நழுவிச் சென்றார்.