சென்னை : ‘இஸ்ரோவின்’ புவி கண்காணிப்பு உட்பட மூன்று சிறிய செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று காலை, 9:18 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பாதுகாப்பு, தகவல் தொடர்பு போன்ற பயன்பாட்டிற்கான செயற்கைக்கோளை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்துகிறது.
இரு ராக்கெட்களும், 1,000 கிலோ எடைக்கு மேல் உள்ள செயற்கைக்கோளை சுமந்தும் செல்லும் திறன் உடையவை.
இஸ்ரோ, 500 கிலோ வரை எடை உள்ள சிறிய செயற்கைக்கோளை சுமந்து செல்ல, எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும் சிறிய வகை ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. பரிசோதனை முயற்சிக்கான முதலாவது எஸ்.எஸ்.எல்.வி., – டி1 ராக்கெட், ‘இ.ஓ.எஸ்., – 02, ஆசாதி சாட்’ ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களை சுமந்தபடி, 2022 ஆக., 7 காலை விண்ணில்
பாய்ந்தது. ராக்கெட்டின் இறுதி கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, திட்டமிட்ட வட்ட பாதையில் செயற்கைக் கோள்கள் நிலை நிறுத்தப்படவில்லை.
தற்போது, இஸ்ரோ கூடுதல் தொழில்நுட்பத்துடன் எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
இந்த ராக்கெட், ‘இ.ஓ.எஸ்., – 07, ஜனஸ் – 1, ஆசாதிசாட் – 2’ ஆகிய மூன்று செயற்கைக் கோள்களை சுந்து, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து,
இன்று காலை, 9:18 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, ‘கவுன்ட் டவுன்’ இன்று அதிகாலை துவங்குகிறது. நம் நாட்டின் முக்கிய செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்., புவியை கண்காணிக்கும் திறன் உடையது. ஆசாதிசாட் 2, நாடு முழுதும் உள்ள, 750 பள்ளி மாணவியர் உருவாக்கியது. ஜனஸ் 1, அமெரிக்காவின் செயற்கைக்கோள். மூன்று செயற்கைக்கோள்களின் மொத்த எடை, 175 கிலோ.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement