நாகர்கோவில்: கன்னியாகுமரியில் விவேகானந்தர்பாறை-திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்க தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாலத்தின் மீது நடக்கும்போது கடல் அலைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். இந்நிலையில், விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்க தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கான திட்டச் செலவு ரூ.37.818 கோடி ஆகும். முழு திட்ட செயல்பாடுகளையும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறைக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி பணிகள் நடைபெறும் இடத்தில் வெடி வெடிப்பு நடத்தக்கூடாது. பாறைப் பகுதிகளில் துளையிடும் செயல்பாடுகளை மட்டுமே மேற்கொள்ளவேண்டும். புயல் உள்ளிட்ட சூறாவளி காற்றின் வேகத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். திருவள்ளுவரின் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை அழகியல் அம்சங்களை பாதிக்கக் கூடாது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.