சென்னை: கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழையினாலான கூண்டு பாலம் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு கடல் நடுவே பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், அதற்கு அடுத்த பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலா பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சங்களாகும்.
இங்கு செல்வதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் விவேகானந்தா, குகன்,பொதிகை ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. கடலில் நீரோட்டம் குறைவான காலங்கள், கடல் சீற்றம், சூறைக்காற்று போன்ற நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி இழையினாலான கூண்டுப்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கண்ணாடி இழை கூண்டுப்பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பக்கவாட்டிலும், நடைபாதையின் கீழேயும் கண்ணாடி வழியாக கடல் அலையை ரசிக்க முடியும். இந்நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.