புதுடில்லி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராஜ்யசபா தலைவர் பதிலளித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி, சமீபத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அவரை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.
இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., ஜவஹர் சிர்கர், ராஜ்யசபாவில் இது தொடர்பாக நேற்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பா.ஜ.,வைச் சேர்ந்த சபை முன்னவர் பியுஷ் கோயல் கூறியதாவது:
விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இதனால் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் பேச வேண்டும். அவர் வழக்கமான நடைமுறைகளுடன் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்றுள்ளார். அதனால், இவ்வாறு கண்ணியமில்லாமல் பேசக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து சபை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியதாவது:
அரசியலமைப்பின் மூன்று துாண்களான பார்லிமென்ட், நீதித் துறை மற்றும் அரசு நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும். ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி, ஜனாதிபதி ஒப்புதலுடன் இந்த நியமனம் நடந்துள்ளது.
அதுபோல, இந்த சபையுடன் தொடர்பில்லாத ஒருவர் குறித்து இங்கு பேசக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
சில விஷயங்களில் நீதித் துறைக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
நம் குடும்பத்தில், அரசியல் கட்சியில் என, அனைத்திலும் கருத்து வேறுபாடு இருக்கும். அவ்வாறு இருந்தால்தான், எந்தப் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும். இதுதான், நம் ஜனநாயகத்தின் சிறப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்