ஈரோடு / சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று (பிப். 10) கடைசி நாளாகும். அங்கு அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத் தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி, 7-ம் தேதி நிறைவடைந்தது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 96 பேர், 121 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனு உள்ளிட்ட 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஈவிகேஎஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அதிமுக), ஆனந்த் (தேமுதிக), மேனகா நவநீதன் (நாம் தமிழர்), சிவ பிரசாந்த் (அமமுக) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று (பிப். 10) மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என டிடிவி.தினகரன் அறிவித்துள்ள நிலையில், அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் இன்று வேட்பு மனுவை வாபஸ் பெறவுள்ளார். வேட்பாளர் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. வரும் 27-ல் வாக்குப்பதிவு, மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 24, 25-ம் தேதிகளில் வீதிவீதியாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
வரும் 24-ம் தேதி ஈரோடு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், வெட்டுக்காட்டு வலசு பகுதியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து, 24, 25-ம் தேதிகளில் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதேபோல, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 20-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.