ஜம்மு,ஜம்மு – காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனை செல்ல முடியாமல் கிராமத்தில் சிக்கிய கர்ப்பிணியை, ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் வாயிலாக அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதால் சில கிராமங்கள் தனித்தீவுகளாகிவிட்டன.
அவசரத்திற்கு கூட கிராமத்தை விட்டு மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுபோன்ற நேரங்களில் அவசர உதவி தேவைப்பட்டால், கிராம மக்கள் ராணுவத்திடம் உதவி கேட்பது வழக்கம். இதற்கென அவசர உதவி எண்கள் உள்ளன.
பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பது மட்டுமின்றி, ஜம்மு – காஷ்மீர் மக்களின் அவசர தேவைகளுக்கு கூட ராணுவம் உதவி செய்கிறது.
இந்நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தின் நவாபச்சி கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணி உயிருக்கு போராடி வருவதாகவும், அவரை மருத்துவமனை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் பனி மூடிக்கிடப்பதாகவும் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக விமானப்படையின் உதவியை நாடிய ராணுவ வீரர்கள், ‘எம்ஐ சாப்பர்’ ஹெலிகாப்டரில் வந்து, கர்ப்பிணியை அழைத்து சென்று மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். சரியான நேரத்தில் உதவிய வீரர்களுக்கு நவாபச்சி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement