புவி கண்காணிப்பு, கடலோர நிலப்பயன்பாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘எஸ்.எஸ்.எல்.வி-டி2’ ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
சிறியரக 2 செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி -டி1 ராக்கெட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், ராக்கெட்டின் சென்சாா் செயலிழந்து தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
அந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்படும் வகையில், தற்போது எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை 9.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
இஒஎஸ்-07 என்ற முதன்மைச் செயற்கைக்கோள் 156 கிலோ எடை கொண்டது. இது புவி கண்காணிப்பு, நகா்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும்.
இதனுடன், அமெரிக்காவின் ஜானஸ் மற்றும் இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட ஆஸாதிசாட்- 2 ஆகிய 2 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.
‘எஸ்.எஸ்.எல்.வி-டி2’ ராக்கெட், தனது 15 நிமிட பயணத்தில் மூன்று செயற்கைக்கோள்களை 450 கி.மீ. வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
newstm.in