2011ம் ஆண்டு முதல் இப்போது வரை இந்திய குடியுரிமையை 16 லட்சம் பேர் துறந்தனர்: கடந்த ஆண்டு 2.25 லட்சம் பேர்

புதுடெல்லி: கடந்த ஆண்டு மட்டும் 2,25,620 பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர் என்றும் 2011 முதல் இப்போது வரை 16 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள்  குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: 2015 ம் ஆண்டில் இந்திய  குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 1,31,489. 2016 ம் ஆண்டில் 1,41,603 பேரும், 2017 ம் ஆண்டில் 1,33,049 பேரும், 2018 ல்  1,34,561 பேரும், 2019 ல் 1,44,017 பேரும், 2020 ல் 85,256 பேரும், 2021 ல் 1,63,370 பேரும் குடியுரிமையை  துறந்துள்ளனர். 2022 ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,25,620 ஆக இருந்தது. பா.ஜ அரசுக்கு முன்பு 2011 ம் ஆண்டில் 1,22,819 பேரும் , 2012 ல் 1,20,923 பேரும், 2013 ல் 1,31,405 பேரும், 2014 ல் 1,29,328 பேரும் குடியுரிமையை கைவிட்டு உள்ளனர். 2011 முதல் இப்போது வரை இந்திய குடியுரிமையை கைவிட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 16,63,440 ஆக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்ட ஆணைய பதவி காலம் நிறைவு: மாநிலங்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதிலில்,‘‘22வது சட்ட ஆணையம் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி அமைக்கப்பட்டது. அதன் தலைவர் 2022ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பொறுப்பேற்றார். ஆணையத்தின் மூன்று ஆண்டுக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகின்றது” என்றார்.

* அணு ஆராய்ச்சி நிலையத்தில் புற்றுநோய்?
பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் கதிர்வீச்சு தொடர்பான புற்றுநோயால் விஞ்ஞானிகள் யாரும் உயிரிழக்கவில்லை. இதுதொடர்பான தேவையற்ற அச்சத்தை போக்க வேண்டும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

* நீதித்துறையில் இடஒதுக்கீடு இல்லை
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்பி திருச்சி சிவாவின் கேள்விக்கு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த பதிலில்,‘‘நீதித்துறையில் தற்போதுள்ள கொள்கையின்படி இடஒதுக்கீடு வழங்கப்படவில்ல்லை. நீதிபதிகள் மற்றும் குறிப்பாக கொலீஜியம் உறுப்பினர்கள் நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளை வழங்கும்போது போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், பெண்கள் மற்றும் இதர பிரிவினரை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உச்சநீதிமன்ற இணையதள தகவலின்படி, பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை 69511 வழக்குகள் நிலுவையில் உள்ளது. நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 59,87,477 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது என்றார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி : எரிபொருள் மீதான சர்வதேச விலை தற்போதுள்ள ஒரு மெட்ரிக் டன் விலையான 750 அமெரிக்க டாலருக்கும் கீழ் குறைந்தால் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை இன்னும் குறைவான விலையில் விற்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.