புதுடெல்லி: தருமபுரி மாவட்டம் ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வி.விஜய்குமார் (30). வெளிநாட்டு வேலையை தேடிவந்த இவருக்கு உ.பி.யின் அலகாபாத்தை சேர்ந்த குணால் தாஸ் அறிமுகமானார். அவரிடம் விஜய்குமார் தனக்கும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளார்.
இதை ஏற்ற குணால் தாஸ், நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2021 மார்ச் முதல் நவம்பர் வரை விஜய்குமார் உள்ளிட்ட 8 பேரிடம் மொத்தம் ரூ.40 லட்சம் தொகையை தனது வங்கிக் கணக்கு மூலம் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் விஜய்குமார் கூறும்போது, “குணால் தாஸ் ஏமாற்றியதால் எனது நிலத்தை விற்று 7 பேருக்கும் ரூ.20 லட்சம் கொடுத்தேன். மீதித் தொகையை கொடுக்கமுடியாமல் குணால் தாஸ் மீது தருமபுரி காவல் நிலையம் முதல் எஸ்.பி. உள்ளிட்ட உயரதிகாரிகள் வரை புகார் செய்தேன். 10 மாதங்களாக எனது புகார் ஏற்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டேன். இதனிடையே தமிழகத்தில் கொள்ளையடித்து உ.பி.க்கு தப்பியவர்களை அங்குள்ள ஐபிஎஸ் அதிகாரி முனிராஜ் பிடிக்க உதவியதாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் அவ்வப்போது செய்திகள் படித்தது நினைவுக்குவந்தது. இதனால், அயோத்யாவில் பணியாற்றும் எஸ்.பி. ஜி.முனிராஜை சந்தித்து முறையிட்டேன். இதன் பிறகு குணால் தாஸ் கைது செய்யப்பட்டார்” என்றார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அயோத்யா மாவட்ட எஸ்.பி. ஜி.முனிராஜ் கூறும்போது,“என்னை விஜய்குமார் சந்தித்து முறையிட்ட பிறகு முதல்கட்ட விசாரணை நடத்தினேன். இதில் அயோத்யாவிலும் குணால் தாஸ் சிலரை ஏமாற்றியது தெரியவந்தது. எனது படையினர் அலகாபாத்தில் பதுங்கியிருந்த குணால் தாஸை கைதுசெய்தனர். குணாலை தமிழகம் அனுப்பி வைக்க அங்குள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருப்பது அவசியம். குணால் மீதான கைது உத்தரவுடன் தமிழக போலீஸார் உ.பி.க்கு வரவேண்டும். இந்த தகவலை தமிழக டிஜிபிக்கு நான் தெரிவித்தேன். அவரது தலையீட்டால் தருமபுரி நகர காவல் நிலையத்தில் பிப்ரவரி 4-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
குணால் தாஸை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக தருமபுரி நகர காவல் நிலையத்தின் ஆய்வாளர் நவாஸ் தலைமையில் 8 பேர் கொண்ட போலீஸ் படையினர் அயோத்தி வந்தனர். இவர்கள் புதன்கிழமை அயோத்தி குற்றவியல் நீதிமன்றம் மூலமாக குணாலை கைது செய்தனர்.
வியாழக்கிழமை காலை ரப்தி சாகர் ரயிலில் புறப்பட்ட இவர்கள் இன்று இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைவார்கள். குணால் தாஸ் மீது பதிவான மோசடி வழக்குகளால் அவருக்கு ஜாமீன் கிடைப்பது கடினம் எனும் சூழல் உள்ளது. ஏமாற்றிய தொகை அனைத்தையும் செலவு செய்துவிட்டதாக கூறும் குணால் தாஸிடம் இருந்து லேப்டாப், கைப்பேசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.