இறந்த மனைவியின் உடலை தோளில் தூக்கிக் கொண்டு கூலித் தொழிலாளி ஒருவர் ஒரு மாநிலத்தில் இருந்து பக்கத்து மாநிலத்திற்கு நடந்து சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலம் கொரபுட் மாவட்டம் சரோடா கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சாமுலு என்பவரின் மனைவி இடுகுரு (30) உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஒடிஷாவில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் அவர் மனைவியை அழைத்து கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு வந்துள்ளார்.
அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனைவியை அனுமதித்தார். அங்கு மனைவியின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே, மனைவியை அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதனையடுத்து சாமுலு வாடகைக்கு ஆட்டோ ஒன்றை பிடித்து அதில் சென்றுள்ளார். அப்போது மனைவி இறக்கவே, ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். சொந்த ஊருக்கு செல்ல காசு இல்லாமல் தவித்த கூலித் தொழிலாளி மனைவியின் சடலத்தை தோளில் போட்டுகொண்டு நடந்தார்.
அவரை வழியில் பார்த்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் சாமுலு மனைவியின் உடலை அவருடைய சொந்த ஊர் வரை கட்டணம் ஏதும் இன்றி அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகைப்படம் மனதை உருக்கிய நிலையில், போலீஸாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in