ஹைதராபாத், ஆந்திராவில் எண்ணெய் ‘டேங்கரை’ சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில், ஏழு பேர் நேற்று பரிதாபமாக பலியாகினர்.
ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ராகம்பேட்டை கிராமத்தில், சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் இதில் தவறி விழுந்தார். இவரை காப்பாற்ற ஆறு ஊழியர்கள் எண்ணெய் டேங்கரில் இறங்கினர். அப்போது, விஷவாயு தாக்கியதில் ஏழு பேரும் மூச்சுத்திணறி பலியாகினர்.
இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கிருத்திகா சுக்லா கூறியதாவது:
தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்கு பேர் கொண்ட குழு, மூன்று நாட்களில் அறிக்கைத் தாக்கல் செய்யும். தொழிற்சாலையில் உள்ள ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ள மாநில அரசு, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததே, ஊழியர்களின் உயிரிழப்புக்குக் காரணம் என பலியானவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement