புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி எழுப்பிய கேள்வியில்,‘‘தொடர்ந்து விலையேற்றம் கண்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் காரணமாக ஏழை மக்களுக்கு கடும் சுமை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்டிருந்தார். இதையடுத்து அதற்கு பதிலளித்த ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,‘‘நாடு முழுவதும் தற்பொழுது 14.2 கிலோ மற்றும் ஐந்து கிலோ சிலிண்டர்களில் சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் நிதி ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக 816.28 கோடி சிலிண்டர்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மொத்தமாக 64.53 கோடி சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சமையல் எரிவாயுவை பொறுத்தவரை 60சதவீதம் தேவையை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் ஒரு மெட்ரிக் டன் 454 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், 2021-22ம் நிதியாண்டில் அது 693 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. வரக்கூடிய நாட்களில் மேலும் இந்த தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தினை சந்தித்து வருவதால் அந்த இழப்பை சரி செய்ய ₹22 ஆயிரம் கோடியை ஒதுக்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.