வேலைக்கார சிறுமியை தம்பதியர் கொடுமைப்படுத்திய விவகாரம் எதிரொலியாக மனிஷ் கட்டார் பணிபுரிந்து வந்த இன்சூரன்ஸ் நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள நியூ காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கொடுமைப்படுத்தப்படுவதாக தொண்டு நிறுவனத்திற்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினருடன் சென்ற தொண்டு நிறுவனத்தினர், அந்த 17 வயது சிறுமியை மீட்டனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த அந்த சிறுமியை மணீஷ் கட்டார் (36) மற்றும் அவரது மனைவி கமல்ஜீத் கவுர் (34) தம்பதியர் வீட்டு வேலைக்காக குருகிராமிற்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின் அந்த சிறுமிக்கு பல நாள் உணவு கொடுக்காமல், சூடான இடுக்கி மூலம் உடல் முழுவதும் சூடு போட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். அத்துடன் கூர்மையான கருவியால் சிறுமியை வெட்டியுள்ளனர். அத்துடன் பல மாதங்களாக அந்த சிறுமி சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கான ஆளாக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.
தற்போது அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கைகள், கால்கள் மற்றும் வாயில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. அந்த சிறுமிக்கு பல நாளாக உணவு கொடுக்கவில்லை. இதனால் குப்பைத் தொட்டியில் எஞ்சியதை சாப்பிட வேண்டிய நிலைக்கு அந்த சிறுமி தள்ளப்பட்டுள்ளார். அவளது வாய் முழுவதும் வீங்கி உடல் முழுவதும் காயம் உள்ளது என எஃப்.ஐ.ஆர் அறிக்கை கூறுகிறது.
கைது செய்யப்பட்ட தம்பதியருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 323, 342, மற்றும் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணீஷ் கட்டார், கமல்ஜீத் கவுர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மனிஷ் கட்டார் பணிபுரிந்து வந்த இன்சூரன்ஸ் நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. இத்தகவலை அந்நிறுவனத்தின் பி.ஆர்.ஓ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM