இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரத்யேக ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்கள் தயாரிக்கப்பட்டன. இவை 500 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது.
எஸ்.எஸ்.எல்.வி டி-2 ராக்கெட்
குறைந்த செலவில் பூமியின் தாழ்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் வகையில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்தது. இது 34 மீட்டர் நீளம், 2 மீட்டர் விட்டம், 120 டன் எடை கொண்டது. முதல் ராக்கெட்டை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
தொழில்நுட்ப கோளாறு
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் ராக்கெட்டின் இரண்டாம் நிலை பிரிவின் போது போதிய திசைவேகத்துடன் எஞ்சின் செயல்படாதது தெரியவந்தது. இதையடுத்து அடுத்தகட்ட முயற்சிக்காக செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. அதன்படி, எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் இ.ஓ.எஸ்-07 என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
மூன்று செயற்கைக்கோள்கள்
இது பூமியை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மாணவிகள் தயாரித்த ஆசாதி சாட்-2, அமெரிக்காவை சேர்ந்த ஜானஸ்-1 ஆகிய செயற்கைக்கோள்களும் அடங்கும். ஆசாதி சாட்-2 செயற்கைக்கோள் ஆனது 8.7 கிலோ எடை கொண்டது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் வழிகாட்டுதலின் படி நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 750 மாணவிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
கவுண்ட்டவுன் ரெடி
மூன்று செயற்கைக்கோள்களும் சேர்ந்து 334 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்காக ஆறரை மணி நேர கவுண்ட்டவுன் இன்று அதிகாலை 2.48 மணிக்கு தொடங்கியது.
புவி சுற்றுவட்டப் பாதை
எஸ்.எஸ்.எல்.வி டி-2 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட உடன் ஒவ்வொரு நிலையாக பிரியும். இறுதியில் மூன்று செயற்கைக்கோள்களும் 356 கிலோமீட்டர் முதல் 450 கிலோமீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இதற்கான தொழில்நுட்ப விஷயங்களை பக்காவாக வடிவமைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர்.
இரண்டாவது முயற்சி
எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் முதல் முயற்சி தோல்வி அடைந்ததால், இரண்டாவது முயற்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று மும்முரமாக செயல்பட்டுள்ளனர். இதற்கான பலனை இன்னும் சற்று நேரத்தில் பார்த்துவிடலாம். எஸ்.எஸ்.எல்.வி டி-2 ராக்கெட்டின் பயணம் வெற்றி அடைய பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.